சென்னை: கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "எனது தொடக்கப்பள்ளிக் காலத்தில் என் பாட்டி வீட்டின் சமையலறையில் நீருற்று பொங்கி வழிந்து அங்கே மீன் பிடித்து விளையாடினோம் என்பதை நம்புவீர்களா? ஆர்டீஷியன் ஊற்றுப்பகுதியாக வெறும் எட்டு அடிகளில் இருந்த நிலத்தடி நீர்மட்டம், இப்போது எண்ணூறு அடிகளைத் தாண்டிக் கொண்டிருக்கிறது.
அத்தகைய நிலங்களில் ஆழ்துளை கிணறுகளை வெட்டி உற்பத்தி செய்த கரும்புகளைக்கொண்டு தான் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் கொண்டாடி மகிழ்கிறோம். தமிழ்நாட்டிலேயே அதிக மூச்சுக் கோளாறு நோயினால் பாதிப்புக்குள்ளாகுபவர்களும், உயிரிழப்பவர்களும் நெய்வேலியைச் சுற்றியுள்ள என் மாவட்டத்துக்காரர்கள் தான். நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஒரு அடி அகலமுள்ள மிதிவண்டியின் இருக்கையில் ஒரு மணிநேரம் கழித்துப் பார்த்தால் 24 மணி நேரமும் நிலக்கரி எரிக்கப்பட்டு வெளியேறும் கரும்புகைத் துகள்கள் முழுவதுமாக மூடியிருக்கும். அதில் உங்களின் பெயரை விரலால் எழுதிப் பார்க்கலாம்.
இம்மாவட்ட நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களில் இதனால் மகரந்தச் சேர்க்கை தடைப்பட்டு எத்தகைய சுற்றுச்சூழல் பாதிப்பினை உருவாக்கும் என்பதை எவராவது உணர்ந்திருக்கிறீர்களா? தமிழ்நாடு மட்டுமின்றித் தென்னகம் மற்றும் வட மாநிலங்களுக்கும் மின்சாரத்தை உருவாக்கித் தந்து பாழ்பட்டுக்கிடப்பது என் மாவட்ட நிலங்களும் மக்களும் தான். ஏற்கெனவே இரண்டு சுரங்கங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மூன்றாவது சுரங்கம் அமைக்க 37ஆண்டுகளுக்கு முன்பே இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை முடக்கி மக்களை வெளியேற்றி விட்டனர்.
அந்த நிலங்களே இன்னும் சுரங்கப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் கிடக்கின்ற நிலையில், இப்பொழுது மேலும் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த மக்களை கட்டாயப்படுத்தி நிலங்களைப் பறித்து வெளியேற்றுவது குறித்து இங்கே எவரும் கண்டுகொள்ளவில்லை. அடிபணியாத மக்களிடம் இந்தியாவிலேயே எங்கும் தரப்படாத இழப்பீட்டுத் தொகையினை அதிகப்படுத்தித் தருவதாக ஆசை காட்டி மிரட்டிப் பணிய வைக்கும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை ஏன் எவரும் கண்டு கொள்ளாமல் உள்ளீர்கள்?
வெளியேற மறுக்கும் மக்களிடம் எதிர்காலத்தில் வேலை வாய்ப்பினைத் தருவதாகக் கூறுபவர்கள் இதுவரை 66 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் எத்தனை பேருக்கு வேலை வழங்கினீர்கள்? சொந்த ஊருக்குள்ளேயே, மாநிலத்துக்குள்ளேயே அகதிகளாக அலைந்து கொண்டிருப்பவர்களை உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. வெளியேற்றப்பட்ட மக்கள் அண்டி வாழும் இடத்தில்தான் ‘பள்ளிக்கூடம்’ திரைப்படத்தின் படக்காட்சிகள் உருவாக்கப்பட்டன.