கடலூர்: சிதம்பரம் நடராஜர் ஆலயம் உலகப் புகழ்பெற்ற ஆலயமாகும். இந்த ஆலயம் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோயிலைத் தீட்சிதர்களே நிர்வகித்து பூஜை செய்துவருகின்றனர்.
இதற்கிடையே சிதம்பரத்தில் உள்ள பழைய புவனகிரி சாலைப் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்கிற ஜெயஷீலா (36) என்பவர் இரு நாள்களுக்கு முன் நடராஜர் கோயிலுக்குச் சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது ஜெயஷீலா சிற்றம்பல மேடையில் ஏறி சாமி கும்பிட முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த தீட்சிதர்கள் சிலர் ஜெயஷீலாவை ஆபாசமாகத் திட்டி திருப்பியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து ஜெயசீலா சிதம்பரம் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், பட்டியலின பெண்ணான தன்னை கோயில் தீட்சிதர்கள் ஆபாசமாகத் திட்டி சாமி கும்பிடவிடாமல் திருப்பி அனுப்பியதாகப் புகார் கொடுத்திருந்தார்.
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தீண்டாமை செயலில் ஈடுபட்டதாக தீட்சிதர்கள் மீது வழக்கு! இந்நிலையில் நடராஜர் ஆலயத்தில் தீட்சிதர்கள் பெண்ணிடம் வாக்குவாதம் செய்வதும், இதில் அந்தப் பெண் நடராஜர் ஆலயத்தில் தீண்டாமை செயல் கடைப்பிடிக்கப்படுவதாகவும் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவிவருகிறது. இதனையடுத்து சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 13 பேர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவில் வழக்குப் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை மீரா மிதுனுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்