கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் வஉசி தெருவைச் சேர்ந்த செல்வகணபதியின் மனைவி லதா(51), காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ஆயங்குடி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார். நேற்றிரவு லதா தனது மகனின் பிறந்த நாளையொட்டி நடராஜர் கோயிலுக்குச் சென்றுள்ளார்.
அப்போது நடராஜர் கோயிலுள்ள முக்குறுணி விநாயகர் சந்நிதியில் தனது மகன் பெயரில் அர்ச்சனை செய்யுமாறு தீட்சிதரிடம் கூறியுள்ளார். அப்போது தீட்சிதர் வெறும் தேங்காயை மட்டும் உடைத்து விட்டு, பழத் தட்டை கொண்டு வந்து கொடுத்ததாகத் தெரிகிறது.
சாமி கும்பிட வந்த பெண்ணை அறைந்த தீட்சிதர் அர்ச்சனை செய்யாமல் ஏன் தேங்காயை மட்டும் உடைத்தீர்கள் என லதா, தீட்சிதரிடம் கேட்டுள்ளார். அதற்குத் தீட்சிதர் லதாவை ஆபாசமாகத் திட்டி, கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்துள்ளார்.
தீட்சிதரின் தாக்குதலில் காயமடைந்த லதா சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தாக்குதலுக்குக் காரணமான தீட்சிதர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'ரஜினி அரசியலுக்கு வருவது சாமி கையில் உள்ளது' - சத்தியநாராயண ராவ்!