கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாசி பட்டாசு தொழிலதிபர் ஒருவரின் இல்லத் திருமணம் விதிமுறைகளை மீறி ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்தது. தீட்சிதரின் விதி மீறிய செயலுக்குபக்தர்கள், தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உடனடியாக தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு கோயிலை, இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.
இந்நிலையில் நடராஜர் கோயிலின் ஐயப்ப தீட்சிதர், நவமணி தீட்சிதர் உள்ளிட்ட மூன்று பேர் இணைந்து இன்று செய்தியாளர்களை சந்தித்தனர் அதில் அவர்கள் கூறியதாவது;
சிவகாசி தொழிலதிபரின் இல்லத் திருமணம் கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்த ஆடம்பர திருமணம் தங்களுக்கே தெரியாமல் நடந்த தவறுதான். அதற்கு காரணமான கோயிலின் பட்டு தீட்சிதருக்கு அபராதம் விதிப்பது, அவர் பூஜைகளில் பங்கேற்காதவாறு இடைகால பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தன்று கோயில் சன்னதிகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால்தான் இந்த விஷயங்களை கவனிக்க முடியவில்லை. வழக்கமாக பாண்டியனார் சன்னதியிலும், அம்மன் சன்னதியிலும்தான் திருமணத்திற்கு இடம் ஒதுக்கப்படும். அவர்கள் பிரார்த்தனை செய்யவேண்டும் என்று கூறியதால், முதலில் நடராஜர் சன்னதி அருகேதான் இடம் ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தில் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால்தான் தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது அதுவும் தவறுதான். திருமணம் நடந்த இடம் நாட்டிய நிகழ்ச்சிக்காகத்தான் அலங்காரம் செய்யப்பட்டது. திருமணத்திற்காக அலங்காரம் செய்யப்படவில்லை. வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது என தீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர்.