கடலூரில் 108 வைணவ தலங்களில் ஒன்றான திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில் உள்ளது. இங்கு மாட்டுப்பொங்கல் கொண்டாடும் விதமாக பாரம்பரிய முறைப்படி மஞ்சு விரட்டு எனப்படும் மாடு மிரட்டல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மாலையில் வெள்ளிக் குதிரை வாகனத்தில் தேவநாதசுவாமி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அப்போது, வேத மந்திரங்கள் முழங்கிட திருவந்திபுரம் கெடிலம் ஆற்றுக்குள் சுவாமி வெள்ளிக் குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.
மேலும், திருவந்திபுரம், தொட்டி, பில்லாலி, சாலைக்கரை உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் ஏற்கெனவே மாட்டுப் பொங்கலிட்டவர்கள் தங்களது மாடுகளை அலங்கரித்து ஆற்றுக்குள் ஓட்டி வந்திருந்தனர். இதையடுத்து, தேவநாத சுவாமி மாடுகளை விரட்டிப் பிடிக்கும் நிகழ்வு நடத்தப்பட்டது.