கடலூர்: விருத்தாச்சலம் அடுத்த ராஜேந்திரபட்டினம் கிராமத்தில் 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இங்குள்ள பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதிக்கு வரக்கூடிய குடிநீரில், துர்நாற்றம் வீசுவதாக அக்கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் ஊராட்சி நிர்வாகம் தரப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளனர். அப்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேலே சென்று பார்த்தபோது, குடிநீர் தொட்டிக்குள் துர்நாற்றத்துடன் அழுகிய நிலையில் ஆண் சடலம் மிதப்பது தெரிய வந்துள்ளது.
பின்னர் இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தீயணைப்புத் துறை உதவியுடன் நீர்த்தேக்க தொட்டியில் இருந்த தண்ணீரை முழுவதும் வெளியேற்றிவிட்டு, அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை கயிறுகள் கட்டி மீட்டனர்.
இதனையடுத்து காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நீர்த்தேக்கத் தொட்டில் சடலமாக கிடந்தது, கடந்த 9 நாட்களாக காணாமல் போன அதே கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கரின் மகன் சரவணக்குமார் என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவரது உடலை உடற்கூராய்விற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதனிடையே கடந்த 9 நாட்களாக சம்பந்தப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டியின் குடிநீரைத்தான், அக்கிராமத்தில் உள்ள அனைவரும் உணவு சமைப்பதற்காகவும், குடிநீராகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். எனவே அந்தத் தொட்டியில் இருந்த தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தி உள்ளதால், மருத்துவக் குழு அமைத்து கிராமம் முழுவதும் பரிசோதனை செய்ய வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் சம்பந்தப்பட்ட நீர்த்தேக்க தொட்டி மற்றும் குடிநீர் செல்லும் பைப் லைனை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க வேண்டுமென அக்கிராமத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சடலமாக கண்டெடுக்கப்பட்ட சரவணக்குமார், நீர்த்தேக்க தொட்டியில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ஒய்.எம்.சி.ஏ.கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை - ரிலீஸ் ஆகிய மற்றொரு ஆடியோ