கடலூர்: வங்கக்கடலில் நீடிக்கும் தீவிர காற்றுழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மேலும் தீவிரமடைந்து மாண்டோஸ்(Mandous) எனும் புயலாக மாறியுள்ளது. இது அடுத்த சில மணி நேரங்களில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு கடற்கரையை நெருங்கும். இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் மழை தொடங்கி சென்னை - புதுச்சேரி இடைப்பட்ட மாமல்லபுரம் அருகே நாளை அல்லது நாளை மறுதினம் வலுகுறைந்து தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும்.
இதனால் கடலூர் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு எற்றப்பட்டது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் தங்கள் படகுகளைக் கடலூர் துறைமுகம் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்
இந்நிலையில் மாண்டோஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். அதில் 27 பேர் கொண்ட குழு சிதம்பரம் வந்தடைந்தனர்.