கடலூர்:தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரித்துவந்த நிலையில், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதிமுதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. அதன் பிறகு கரோனாவின் தாக்கம் குறைந்துவந்தது. இதனால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து செயல்படுத்தியது.
இதற்கிடையில் உருமாறிய ஒமைக்ரான் தொற்றுப் பரவல் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இதனால் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.
அதன்படி கடைகள், ஓட்டல்கள், திரையங்குகளில் 50 விழுக்காட்டினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த இரவு நேர ஊரடங்கு நேற்றுமுதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
கடலூர் திரையரங்கில் சோதனை
கடலூர் மாவட்டத்திலும் இந்த விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வந்தன. கடலூர் மாவட்டத்தில் உள்ள திரையரங்கங்களிலும் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றன. மாவட்டத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் 50 விழுக்காட்டினர் அமர்ந்து படம் பார்க்கும் வகையில், இருக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
அதாவது ஒரு இருக்கைக்கும், மற்றொரு இருக்கைக்கும் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டு உள்ளது. நுழைவு வாசலில் சானிடைசர் வைக்கப்பட்டுள்ளது.