கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆண்டிப்பாளையம் மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்தவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அம்மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
நாங்கள் (ஆண்டிபாளையம் சுய உதவிக்குழு உறுப்பினர்கள்) சில தனியார் நிதி நிறுவனங்களிலிருந்து சுய உதவிக்குழுவிற்குத் தேவையான கடன்களைப் பெற்றுக்கொண்டோம்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா ஊரடங்கு உத்தரவால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வேலை வாய்ப்பின்றி அன்றாட குடும்பம் நடத்துவதற்கே வழி இல்லாத சூழலில் சிரமப்பட்டுவருகிறோம்.
இந்தச் சூழ்நிலையைப் புரிந்துகொண்ட மத்திய, மாநில அரசுகள், ரிசர்வ் வங்கி ஆறு மாத காலத்திற்கு கடன் தவணையை செலுத்த வேண்டாம் எனக் கூறியுள்ளன. ஆனால் நிதி நிறுவனங்கள் அரசு உத்தரவைக் கண்டுகொள்ளாமல் இந்த ஊரடங்கு உத்தரவு காலத்திலும் கடனைக் கட்டச் சொல்லி வற்புறுத்துவதோடு கட்டாத கடன் தவணைக்கு அதிகப்படியான அபராத வட்டிபோட்டு அதனைக் கட்டக்கோரியும் வற்புறுத்திவருகின்றனர்.