கடலூர்: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே அனுபவம் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயந்தி. இவருடைய கணவர் செல்வராஜ். இத்தம்பதியினர் அனுபவம் பட்டு கிராமத்தில் டீக்கடை மற்றும் சிறிய உணவகம் ஒன்றினை நடத்தி வந்தனர். இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக, கடலூரில் உள்ள எக்விடாஸ் வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டியுள்ளனர். அந்த வீட்டின் பாதி கடன் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், வங்கி ஊழியர்கள் மேலும் டாப்-அப் செய்ய சொல்லி இத்தம்பதியினருக்கு தினமும் போன் செய்துள்ளனர்.
முதலில் மறுத்த இத்தம்பதியினர் பின்பு தன் மகளின் திருமணத்திற்காக அக்கடனை டாப்-அப் செய்துள்ளனர். இதனால் அக்கடனின் இஎம்ஐ தொகை மேலும் அதிகரித்துள்ளது. பின் இஎம்ஐ கட்ட முடியாமல் சிரமப்பட்ட ஜெயந்தி, கடந்த ஒரு மாதம் மட்டும் இஎம்ஐ கட்டவில்லை. இதனால் வங்கி ஊழியர்கள் பலமுறை ஜெயந்தியிடம் போன் செய்து பணத்தை கட்டும்படி கூறியுள்ளனர்.
மேலும், ஜெயந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளததாக கூறப்படும் நிலையில், அதனால் தவணை கட்ட அதிகம் சிரமப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக வங்கி ஊழியர்கள் வீட்டிற்கு வந்து ஜெயந்தியை தரக்குறைவாக பேசி உள்ளனர். நேற்று முன்தினம் (ஆக. 5) மதியம் 3 மணியளவில் ஜெயந்தியின் வீட்டிற்கு வந்த வங்கி ஊழியர்கள், இரவு 8 மணிவரை வீட்டிற்குள்ளேயே அமர்ந்து தரக்குறைவான வார்த்தைகளால் அவரை அவமானப்படுத்தி உள்ளனர்.