கடலூர்: விருத்தாசலத்தை சுற்றியுள்ள மங்கலம்பேட்டை, கம்மாபுரம், பெண்ணாடம், வேப்பூர், தொழுதூர், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து தினமும் 1000த்திற்க்கும் மேற்பட்ட நோயாளிகள் விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு வந்து, உள், வெளி நோயாளிகளாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதில் 90 விழுக்காடு நபர்கள் கிராமத்திலிருந்து வரும் ஏழை, எளிய நோயாளிகளாக உள்ளனர். இதனால் சிகிச்சைக்கு வரும் கிராமத்து மக்களிடம், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் அணுகும் முறை அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
அலட்சியமாக ஊசி செலுத்திய செவிலியர்
இந்நிலையில், நேற்று முன்தினம் (ஆக.12) இரவு தொரவலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜவேல் மகன் ஜெயசீலன் என்பவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்தபோது, மருத்துவர் கூறியதன் பேரில் செவிலியர் ரேவதி, ஜெயசீலனுக்கு இடுப்பில் ஊசி செலுத்தியுள்ளார்.
அப்போது, ரேவதி செல்போன் பேசிகொண்டே ஊசியை செலுத்தியுள்ளார். இதனை நோயாளியின் உறவினர்கள் தட்டிக்கேட்டபோது ரேவதி தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து இதனை நோயாளியின் உறவினர்கள் தங்களது செல்போனின் காணொலியாக எடுத்துள்ளனர்.