கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இந்தியா லிமிடெட் நிலக்கரி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு என்எல்சி பொது மருத்துவமனையும் உள்ளது. நெய்வேலி அதை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து தினம்தோறும் ஆயிரக்கணக்கானோர், இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பொது மருத்துவமனைக்கு இன்று காலை தபால் மூலம் ஒரு கடிதம் வந்தது. அதில், மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் என்ன செய்வது என திகைத்துப்போன மருத்துவமனை நிர்வாகம், உடனடியாக என்எல்சிக்கும் என்எல்சி தெர்மல் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், மருத்துவமனையை ஆய்வு செய்தனர். பின்னர் கடலூர் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவு, நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.