கடலூர் மாவட்டத்திலுள்ள 13 ஒன்றியங்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று அதற்கான வாக்கு எண்ணிக்கை சென்ற ஜனவரி மாதம் இரண்டாம் தேதி நடைபெற்றது.
இதில் கீரப்பாளையம் ஒன்றியம், மூன்றாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக மகளிரணி மாவட்ட அமைப்பாளர் த.அமுதராணி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கவிதா என்பவரும் காஞ்சனா, சந்தோஷ் குமார் ஆகிய பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போட்டியிட்டனர். தேர்தலில் கவிதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சந்தேகமடைந்த திமுக வேட்பாளர் அமுதராணி, தேர்தல் நடத்திய அலுவலர் ஜெயக்குமாரிடம் முறையிட ”தாமதமாக வந்து சொல்கிறீர்களே” என அவர் அமுதராணியைத் திருப்பி அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, சக வேட்பாளர்களான காஞ்சனா, சந்தோஷ் குமார் ஆகியோர் ஆர்டிஐ எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தேர்தல் வாக்கு விவரங்களைக் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அதில், அமுதராணி 1172 வாக்குகள் பெற்றிருந்ததும், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட கவிதா 1066 வாக்குகள் மட்டுமே வாங்கியிருந்ததும் ஆதாரத்துடன் தெரிய வந்துள்ளது.