கடலூர் மாவட்டம், முதுநகர் சான்றோர் பாளையம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கலைச்செல்வம் (29). இவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்பராயசெட்டி தெருவில் உள்ள பிரபல நகைக்கடையில் நெக்லஸ் பிரிவில் கண்காணிப்பாளராக கடந்த ஆறு ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கலைச்செல்வம் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி விடுமுறை எடுத்து இருந்ததால் கடையின் உரிமையாளர் முரளி மற்றும் ஊழியர்கள் நெக்லஸ் பிரிவில் உள்ள நகைகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு கிலோ தங்க நகை குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த கடையின் உரிமையாளர் முரளி, கலைச்செல்வத்தைத் தொடர்பு கொண்ட போது, அவருடைய செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
இதன் பின்னர் இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் முரளி புகாரளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி தலைமையில் காவல் ஆய்வாளர்கள் குணசேகரன், பாலசுதர், துணை ஆய்வாளர் கதிரவன், குற்றப்பிரிவு காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் கலைச்செல்வத்தை தீவிரமாகத் தேடி வந்தனர்.