கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சொத்தி குப்பம் உள்ளிட்ட பல மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் ஒரு சில மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி கடலில் மீன்பிடித்து வந்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் சுருக்கு மடி வலை பயன்படுத்தி கடலில் மீன் பிடிக்க கூடாது, அவ்வாறு மீன் பிடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது.
இந்த எச்சரிக்கையையும் மீறி சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்த ஐந்துக்கும் மேற்பட்ட படகுகள், வலைகளை கடலூர் மீன்வளத் துறையினர் பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்கள் எங்களது வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்படும் என்று கூறி அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் இந்த மனுவிற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது மீனவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து தேவனாம்பட்டினம் மீனவர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக கடலுக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் தேவனாம்பட்டினம் மீனவர் கிராம பஞ்சாயத்து சார்பாக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அரசை கண்டித்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்பு உள்ளதாக ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் பரப்புரை செய்தனர்.