கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முகமது சம்ஷித் (45). இவர் அதே பகுதியில் உள்ள தாலுகா அலுவலகம் அருகே கடந்த ஐந்து வருடங்களாகக் கணினி மையம் நடத்தி வருகிறார்.
இந்த கணினி மையத்தில் போலி ரேஷன் கார்டு அச்சடித்து விற்கப்படுவதாகக் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், மாவட்டஆட்சியர் அன்புச்செல்வன் இது சம்பந்தமாக விசாரணை நடத்த வட்டாட்சியர் தமிழ்ச்செல்வனுக்கு உத்தரவிட்டார்.
போலி ரேஷன் கார்டு அச்சடித்த முகமது சம்ஷித் இதனைத் தொடர்ந்து, வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர் சாருலதா உள்ளிட்ட அலுவலர்கள் முகமது சம்ஷித் நடத்திவரும் கணினி மையத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது, அந்தக் கணினி மையத்தில் அரசு அனுமதியின்றி இணையதளத்தைப் பயன்படுத்தி அசலை போல போலியாக ரேஷன் கார்டு அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதும், ரூபாய் 300 கொடுத்தால் ரேஷன் கார்டு தொலைத்தவர்கள், பெயர் மாற்றம் உள்ளிட்டவை செய்து கொடுப்பதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, அந்த கணினி மையத்திலிருந்து மடிக்கணினி, பிரிண்டர், 33 போலி ரேஷன் கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வட்ட வழங்கல் அலுவலர் சாருலதா காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலி ரேஷன் கார்டு அச்சடித்த கடையை சோதனை செய்யும் அலுவலர்கள் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கடையின் உரிமையாளர் முகமது சம்ஷிதை கைது செய்தனர்.
இதையும் படிங்க:போலி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கில் மோசடி செய்தவர் கைது