கடலூர்:பண்ருட்டி அருகில் பணிக்கன் குப்பம் என்ற இடத்தில், கடலூர் திமுக மக்களவை உறுப்பினர் ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி ஆலை உள்ளது. இங்கே கோவிந்தராஜ் என்ற தொழிலாளி 15 ஆண்டுகளாக வேலை செய்துவந்தார். இவர் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி இரவு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார்.
அவரை நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷும், அவரது ஆட்களும் தாக்கிக் கொலை செய்துவிட்டார்கள் என்று கோவிந்தராஜின் மகன் செந்தில்வேல் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதற்கிடையே பாமக பிரமுகரான வழக்கறிஞர் கே. பாலு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பெயரில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் கோவிந்தராஜின் உடலை கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்தனர்.
வழக்கின் தீவிரத்தையடுத்து, தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு கோவிந்தராஜின் சந்தேக மரணம் குறித்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரிக்க உத்தரவிட்டார். இதையடுத்து இவ்வழக்கை காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோமதி தலைமையில் திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூரைச் சேர்ந்த நான்கு ஆய்வாளர் கொண்ட சிபிசிஐடி காவல் துறையினர் செப்டம்பர் 28ஆம் தேதி விசாரணையைத் தொடங்கினர்.