கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை அம்மாவட்ட ஆட்சியர் வெ. அன்புச்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிதம்பரம் அருகே தில்லைவிடங்கன் ஊராட்சி கீழ்காட்டி கிராமத்தில் நடைபெற்றுவரும் மேம்பாலப் பணி, லால்புரத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் நிலம் கையகப்படுத்தும் பணி, சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட தில்லை காளியம்மன் ஓடை தூர்வாரும் பணி, சிதம்பரம் அரசினர் நந்தனார் ஆண்கள் பள்ளியில் மாணவர்களின் வகுப்பறை, சமையல் கூடம், சுற்றுப்புறத்தினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து பெராம்பட்டு-திட்டுகாட்டூர் இணைப்பு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி, எருக்கன்காட்டுப் பகுதி சாலை அமைத்தல், பலப்படுத்தும் பணி, குமராட்சி ஊராட்சி ஒன்றியம் அக்கரை ஜெயங்கொண்டான் ஏரி, வேலங்குடி பழைய கொள்ளிடம் ஆறு, வீராணம் ஏரி ராதா மதகு, வீராணம் ஏரி வாழக்கொல்லை புது வாய்க்கால், புவனகிரி பேரூராட்சியில் செயல்பட்டுவரும் ஸ்ரீ ராகவேந்திரா மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். ஆய்வின்போது அப்பகுதி மக்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.