இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கூறியதாவது, “கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. கடலூரில் ஆரம்பத்தில் 26 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட், பிற மாநிலங்களிலிருந்து கடலூர் மாவட்டத்திற்கு வந்தவர்கள் கண்டறியப்பட்டு 10 சோதனைச் சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டதில் மொத்தம் 699 பேரைக் கண்டறிந்துள்ளோம். பின்னர் அவர்கள் அனைவரையும் சோதனை செய்ததில் 160 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 129 பேர் கோயம்பேட்டிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.