கடலூர்:கடலூர் மத்திய அதிமுக மாவட்ட ஆலோசனைக் கூட்டம் பாதிரிக்குப்பம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அதிமுக கடலூர் மத்திய மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி. சம்பத் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில் பேசிய அவர், "சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இந்த கூட்டம் நடைபெறுகிறது.
பொலிவோடு உள்ள அதிமுக
கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய கட்சிக்கு களங்கம் ஏற்படுத்திய 15 பேர் கழகத்திலிருந்து நீக்கப்பட்டனர்.
கழகம் 66 சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பெற்று சிறப்பான எதிர்க்கட்சியாக இயங்கிக் கொண்டு வரும் வேளையில் அதிமுகவில் குழப்ப நிலையை உருவாக்க ஒரு சிலர் முயன்று கொண்டு இருக்கின்றார்கள். அவர்களை நாம் புறந்தள்ள வேண்டும். அவர்களை நாம் தோல்வியுறச் செய்ய வேண்டும்.
அதிமுக மிகுந்த வலிமையோடும் பொலிவோடும் உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் கட்டுக்கோப்பாக வழிநடத்திச் செல்கின்றனர்.
பலமான எதிர்க்கட்சியான நமது அதிமுகவை அபகரிக்க சிலர் முயற்சி செய்கின்றனர். அவர்களின் எண்ணம் என்றும் நிறைவேறாது. நமது அதிமுகவை அபகரிக்க முயற்சி செய்பவர்களின் எண்ணங்களை தூள் தூளாக்கி நமது அதிமுக தலைமை எடுக்கும் முடிவிற்கு நாம் அனைவரும் கட்டுப்பட வேண்டும்.
கரோனாவைத் தவறாக கையாளும் திமுக
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து கரோனாவைக் கையாளும் விதம் தவறானது. நாம் கையாண்டதற்கும் அவர்கள் கையாண்ட விதத்திற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. உயிரிழப்பு இல்லாமல் நாம் கரோனாவைக் கையாண்டோம். திமுகவின் ஆட்சிக் காலத்தில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
கரோனா காலத்தில் நமது மாவட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓடோடி வந்து ஆய்வு செய்தார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூன்று முறை வந்து, நமது மாவட்டத்தை கரோனா இல்லாத மாவட்டமாக மாற்றினார்.
இந்த அரசு ஆட்சிப் பொறுப்பில் வந்ததிலிருந்து பல்வேறு கெட்ட பெயர்களையே வாங்கி உள்ளது. கரோனாவைக் கட்டுப்படுத்த திராணியற்ற அரசாக இந்த அரசு உள்ளது" என்றார்.
சசிகலாவைக் கண்டிக்கும் தீர்மானம் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் இக்கூட்டத்தில் இயற்றப்பட்டது.
இதையும் படிங்க:'சசிகலாவின் சலசலப்புக்கு அஞ்சமாட்டோம்'- முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்