உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கரோனா பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட அபாய நிலையை எட்டியிருக்கும் கரோனா பரவல், அதிக பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. இதன் காரணமாக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டம், தமிழ்நாடு அளவில் பாதிப்பில் 19ஆவது இடத்தில் உள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பணிகளில் காவல் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை என மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு துறை சார்ந்தவர்களும் ஈடுபட்டுவருகின்றனர். முகக்கவசம், கபசுரக் குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, கடலூரில் உள்ள மருத்துவ முகாம், நடமாடும் பரிசோதனை மையங்களை அமைத்து மக்களுக்கு கரோனா கண்டறிதல் சோதனை செய்யப்பட்டுவருகிறது. இதற்காக 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.