கடலூர் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஆட்சியர் வி.அன்புச்செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியதாவது; முதலமைச்சர் கூறியதை போல், விழித்திரு, விலகியிரு, சமூக இடைவெளியை மேற்கொண்டு, தன்னைத்தானே தனிமைப்படுத்தி மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் மக்களின் அலட்சியத்தால் பெரும் அவதிக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர்.
எனவே, இனிவரும் 15 நாட்களில் மக்கள் அனைவரும் மிகவும் கவனமாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களுக்காக கூட்டுறவுத்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, மருத்துவத்துறை, நகராட்சி மற்றும் பேரூராட்சித்துறைகளை சார்ந்த அலுவலர்கள் முழு ஈடுபாட்டோடு சேவை செய்து வருகிறார்கள். பொதுமக்களாகிய நீங்களும் எங்களோடு ஒத்துழைத்து, கரோனா வைரஸ் பரவாமல் கடலூர் மாவட்டத்தை காத்திட வேண்டும்.