கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மணலூரை சேர்ந்தவர் சக்திவேல் - முத்துலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகள் என ஐந்து குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் சக்திவேல் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
கணவனை இழந்த முத்துலட்சுமி தனது ஐந்து பிள்ளைகளை வளர்க்க முடியாமலும், பிள்ளைகளை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு போதிய வீடு வசதி இல்லாமலும் தவித்து வந்துள்ளார். இந்நிலையில் சாலை விபத்து விசாரணையின் போது, முத்துலட்சுமியின் ஏழ்மை நிலையையும், ஐந்து பிள்ளைகளை வைத்து அவர் படும் துன்பத்தையும் கண்ட விருத்தாச்சலம் காவல் உதவி கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ், அக்குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டுமென முடிவெடுத்தார்.
அதன்படி வாட்ஸ் அப் குழு ஒன்றை ஆரம்பித்து, அக்குடும்பத்தின் ஏழ்மை நிலையை பற்றி தெரிவித்த போது, விருத்தாச்சலம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட ஆலடி, கருவேப்பிலங்குறிச்சி, கம்மாபுரம், மங்கலம்பேட்டை,
பெண்ணாடம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர்கள் என அனைவரும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
அவர்கள் கொடுத்த தொகை மற்றும் தன்னார்வலர்கள் கொடுத்த தொகை என ஒட்டுமொத்தமாக சேர்த்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன குளியலறை, சமையலறை, படுக்கையறை என சகல வசதிகளுடன் கூடிய கருணை இல்லத்தை காவல்துறையினர் கட்டிக் கொடுத்துள்ளனர். இவ்வாறு கட்டப்பட்ட கருணை இல்லத்தை, இன்று (அக்.26) கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.