கடலூர்:ஒன்றிய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் 10 மாதத்துக்கு மேலாக உழவர் போராடிவருகின்றனர். இவர்களை ஆதரித்து உத்தரப் பிரதேச உழவர், லக்கிம்பூர் கெரி என்ற இடத்தில் பாஜகவுக்கு எதிராகக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உழவர் மரணம்
அப்போது அங்கு ஏற்பட்ட வன்முறையில் நான்கு உழவர், செய்தியாளர், பாஜகவினர் உள்பட எட்டு பேர் உயிரிழந்தனர்.
நாட்டையே உலுக்கிய இத்தகைய செயலுக்கு காரணமாக இருந்த ஒன்றிய அமைச்சரின் மகனையும், குண்டர்களையும் கைதுசெய்து, அமைச்சரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று (அக்டோபர் 10) கடலூர் ஜவான் பவான் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஒன்றிய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
விவசாயிகள் படுகொலை தொடர்பாக போராட்டம் எம்எல்ஏவோ எம்பியோ தப்புதப்புதான்
இதையடுத்து செய்தியாளரிடம் பேசிய கே. பாலகிருஷ்ணன், “டெல்லியில் கடந்த பத்து மாத காலமாக மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, உத்தரப் பிரதேசத்தில் லக்கிம்பூர் கெரி என்ற இடத்தில் பாஜக மக்களவை உறுப்பினருக்கு எதிராகக் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது உழவர் மீது ஒன்றிய அமைச்சரின் மகன், குண்டர்கள் காரை ஏற்றி படுகொலை செய்ததில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். இந்தப் பிரச்சினைக்கு மத்திய இணையமைச்சர் மட்டுமல்ல, உத்தரப் பிரதேசத்தின் ஆளும் அரசும் இதற்குப் பொறுப்பு. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கடந்த ஐந்து மாதங்களாக திமுக அரசு பொறுப்பேற்று உள்ளது. இருந்தாலும் இன்னும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். கடலூர் திமுக மக்களவை உறுப்பினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாராக இருந்தாலும் கைதுசெய்க
கொலைக் குற்ற வழக்கில் எந்தச் சட்டப்பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர் சம்பந்தப்பட்டு இருந்தாலும் அவர்கள் எந்தக் கட்சிக்காரராக இருந்தாலும் அவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது” எனக் கூறினார்.
இதையும் படிங்க: நிலக்கரி தட்டுப்பாடு: மின் தடை ஏற்பட அதிக வாய்ப்பு