கடலூர்: தேவனாம்பட்டினம் அரசு தந்தை பெரியார் கலை கல்லூரி மாணவ மாணவிகள் நேற்று முன்தினம்(அக்.11) கடலூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் சென்றபோது கடற்கரை சாலையில் ஆட்டோவின் குறுக்கே நாய் சென்றதால் நிலைத்தடுமாறி ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மூன்றாம் ஆண்டு B,Sc மைக்ரோ பயாலஜி படிக்கும் மாணவன் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 5 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் நேற்று(அக்.12) உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, ரூபாய் 2 லட்சம் நிவாரணம் அளித்து அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து விபத்தினால், நேற்று(அக்.12) கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. இன்று (அக்.13) வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த மாணவர்கள், மாணவன் தமிழ்ச்செல்வன் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட 2 லட்சம் இழப்பீடு போதாது என்றும், கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரி கல்லூரியிலிருந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி 1000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பேரணியாகச் சென்றனர்.
அப்போது காவல் துறையினர் மாணவ மாணவிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து மாணவர்கள் காவல் துறையினர் தடுத்து நிறுத்தப்பட்ட இடத்தில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பொது மக்களின் பாதுகாப்பிற்காவும், மாணவ மாணவிகளை கட்டுப்படுத்தவும் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பாதுகாப்பு கருதி வஜ்ரா வாகனம் வரவழைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவியது.