கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி, வடலூர், கெங்கைகொண்டான், அரசக்குழி, மங்களம்பேட்டை, இருப்பு, மருங்கூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைகள், விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடம், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் கூறுகையில், "கடலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை, மருத்துவத் துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குள்ளஞ்சாவடி, வடலூர், கெங்கைகொண்டான், அரசக்குழி, மங்களம்பேட்டை மருங்கூர் ஆகிய மருத்துவமனைகளில் பொதுமக்கள் எந்த காரணத்திற்காக மருத்துவமனைக்கு வருகிறார்கள் என்பதையும், பொதுமக்கள் காய்ச்சல், சளி போன்ற காரணத்திற்காக வரும்பட்சத்தில் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் பரிசோதனை செய்ய மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பொதுமக்கள் செல்லும்போது காய்ச்சல், சளி போன்ற அறிகுறி இருந்தால் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) ஆகியோருக்கு நாள்தோறும் தகவல் தெரிவிக்க வேண்டும். நகர் மற்றும் கிராமப்புறங்களில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட வேண்டும் என மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாவட்டத்திலுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அனைத்துப் பகுதிகளிலும் தொற்று பரவாமல் இருக்க வீடு வீடாக ஆய்வு செய்யப்படுகிறது. கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடர் அனைத்துப் பகுதிகளிலும் தெளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். முகக்கவசம் இல்லாமல் வெளியே வரும் நபர்களுக்கு ரூபாய் 100 அபராதம் விதிக்கப்படும். அனைத்து நகராட்சிப் பகுதிகளிலும் பொதுமக்கள் வெளியே வருவதற்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.