கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன் தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், குள்ளஞ்சாவடி, புவனகிரி, காட்டுமன்னார் கோயில், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி வருவாய் அலுவலரிடம் கொடுத்தனர்.
நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த 392 மனுக்களை கள ஆய்வு செய்தும், தீர ஆராய்ந்தும் விதிமுறைகளுக்குட்பட்டு துரித நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அந்தந்த துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 15 நபர்களுக்கு மாற்றுத்திறானாளி மற்றும் முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 8 நபர்களுக்கு இலவச தையல் இயந்திரங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இருவருக்கு 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளையும் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.