தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீராணம் ஏரியிலிருந்து நீரேற்றம் செய்ய முடிவு - ஏரிகள் தூர்வாரும் பணி

கடலூர் மாவட்டத்திலுள்ள வீராணம் ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் நீரேற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீராணம் ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் நீரேற்றம் செய்ய முடிவு
வீராணம் ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் நீரேற்றம் செய்ய முடிவு

By

Published : Jul 12, 2021, 6:47 AM IST

சென்னை: சென்னையின் குடிநீர் தேவை நாள்தோறும் 830 மில்லியன் லிட்டராக உள்ளது. கடந்தாண்டு பெய்த வடகிழக்கு பருவமழையினால் அனைத்து ஏரிகளிலும் நீர்மட்டம் உயர்ந்தது.

எனினும் தற்போது நீர் இருப்பு பாதியாக குறைந்துள்ளது. இதனால் மாற்று நீர் ஆதாரத்தை சென்னை குடிநீர் வாரியம் எதிர்நோக்கியுள்ளது. இந்த நிலையில் வீராணம் எரியில் இருந்து நீரேற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

100 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம்

கடந்த காலங்களில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும்போது நாள்தோறும் 650 மில்லியன் லிட்டர் நீர் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. சென்னையின் புறநகர் பகுதிகள் மற்றும் மீஞ்சூர், நெம்மேலி ஆகிய இடங்களில் செயல்படும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் நாள்தோறும் 100 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

ஏரிகள் தூர்வாரும் பணி:

இது குறித்து உதவி செயற்பொறியாளர் அருணகிரி தொலைபேசி வாயிலாக நம்மிடம் கூறுகையில், "வீராணம் ஏரியில் கடந்தாண்டு நல்ல நீர் இருப்பு இருந்தது. எனினும் பராமரிப்பு பணிக்காக 2021 பிப்ரவரி முதல் தண்ணீரை வெளியேற்றும் பணி தொடங்கியது. கடந்த ஆறு மாதமாக ஏரியில் தூர்வாரும் பணி, கரையை பலப்படுத்தும் பணிகள் உள்பட பல வேலைகள் நடைபெற்றன.

வீராணம் ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் நீரேற்றம் செய்ய முடிவு

கடந்த ஜூலை 9ஆம் தேதி கல்லணையிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு கொள்ளிடம் கீழனையை அடைந்து வடவாறு கால்வாய் வழியாக வீராணம் ஏரியை வந்து சேர்ந்தது. இதன் பின்னர் ஏரியின் நீர் மட்டம் ஓரளவை உயர்ந்ததையடுத்து சென்னைக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு தினந்தோறும் 180 மில்லியன் லிட்டர் நீர் வழங்கப்படும்” என தெரிவித்தார்.

வீராணம் ஏரியிலிருந்து நீர் கொண்டுவர முடிவு:

இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் அலுவலர் கூறுகையில், "சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளிலும் நீர் இருப்பு போதுமானதாக உள்ளது. எனினும், தேவையை அதிகப்படுத்த வீராணம் ஏரியிலிருந்து நீர் கொண்டு வரப்படும். வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை அடுத்த ஒரு வாரதிற்குள் எட்டிவிடும். அதன் பிறகு நீரேற்றம் செய்து குழாய் வழியாக தண்ணீர் கொண்டு வரப்படும்" என்றார்.

இன்றைய நிலவரப்படி, மெட்ரோ ஏரிகளான செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், தேர்வாய் கண்டிகை, புழல் உள்ளிட்ட ஏரிகளில் நீர் இருப்பு 6 ஆயிரத்து 912 மில்லியன் கியூபிக் அடியாக உள்ளது. கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் 10 ஆயிரம் மில்லியன் கியூபிக் அடிக்கும் மேலாக நீர் இருப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீர் 500 கனஅடி வந்து கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: ஏற்காடு ஏரியில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை!

ABOUT THE AUTHOR

...view details