பணிமனையில் ஊழியர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு கடலூர்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நீண்ட காலங்களாக வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்,
புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், வாரிசு பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் போன்ற 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று (ஜன.08) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்.
முன்னதாக நேற்று போக்குவரத்து அமைச்சர் உடனான பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. அதனை அடுத்து அறிவித்தபடி, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். இதனை அடுத்து, நேற்று (ஜன.8) இரவு பயணிகளை இறக்கிவிட்டு, பேருந்துகள் பணிமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. இதனால் இரவு நேரத்தில் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
அதனை அடுத்து, இன்று (ஜன.9) அதிகாலை முதல் பேருந்துகள் இயக்கப்படாமல், அந்தந்த பகுதியில் இருக்கும் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதனிடையே வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் சங்கங்களில் இல்லாத ஊழியர் சிலர் பேருந்துகளை இயக்கி வந்தனர்.
இதையும் படிங்க:விழுப்புரம் கோட்டத்தில் அனைத்து பேருந்துகளும் வழக்கம் போல் இயங்கும்!
அந்த வகையில், கடலூர் பணிமனையில் போராட்டம் நடத்தும் தொழிற்சங்கத்தை சாராத போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்க வந்துள்ளனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், அவர்களை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இரு தரப்பினர் இடையேயான வாக்குவாதம், தள்ளுமுள்ளாக மாறியது.
இதனால், பணிமனைக்கு பேருந்தை இயக்க வந்திருந்த போராட்டம் நடத்தும் தொழிற்சங்கத்தைச் சாராத ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணிமனையிலேயே காத்துக் கிடந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், இரு தரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், போராட்டத்தில் ஈடுபடாத ஊழியர்கள் பேருந்துகளை இயக்கிச் சென்றனர்.
இதனை அடுத்து, தற்போது வரை கடலூர் பணிமனையில் இருந்து 20 சதவீத பேருந்துகள் பேருந்துகள் மட்டுமே வெளியே சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிலும், பெரும்பாலும் உள்ளூர் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சி, மதுரை, திருவண்ணாமலை, அரியலூர், விழுப்புரம் மற்றும் சென்னை உள்பட பிற மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதையும் படிங்க:பகலில் ஆம்னி பேருந்துகளை இயக்க தயார்.. அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!