கடலூர்:சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இதனை நிர்வகித்து வரும் தீட்சிதர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுவருகின்றன. அதில் குழந்தை திருமணம் செய்து வைப்பதாக கடந்த சில வருடங்களாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இந்த புகார்களுக்கு ஆதாரம் எதுவும் இல்லாமல் இருந்து வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற குழந்தை திருமணம் தொடர்பாக 10 நாள்களுக்கு முன்பு 2 தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரியில், சிதம்பரத்தில் ஒரு தீட்சிதரின் 13 வயது மகளுக்கு 19 வயது தீட்சிதருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக சமூக நலத்துறையின் ஊர் நலத்துறை அலுவலர் சித்ரா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் கடலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர், திருமணம் செய்த பத்ரிசன் தீட்சிதர் மற்றும் அவரது தந்தை நாகரத்தினம், தாய் சித்ரா, பத்ரிசனின் அண்ணன் சூர்யா, சிறுமியின் தந்தை ராஜ கணேச தீட்சிதர் மற்றும் தாய் தங்கம்மாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.