கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த கட்டியம் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி, கூலித் தொழிலாளி. இவரின் மனைவி பூமதிக்கு, 10 மாதங்களுக்கு முன்பாக ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், இடது பக்கம் இருக்க வேண்டிய இருதயம் குழந்தைக்கு வலது பக்கம் இருப்பதைக் கண்டறிந்தனர்.
மேலும் உடலுக்குத் தேவையான ரத்தத்தை பம்ப் செய்து அனுப்பும் நான்கு குழாய் அறைகளில் ஒரு குழாய் மட்டுமே இருப்பதை அறிந்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தைக்கு ரத்த சுத்திகரிப்பு என்பது இல்லை. குழந்தைக்கு ரத்த சுத்திகரிப்பு குழாய்; அறைகளை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், பிறந்த குழந்தைக்கு உடனே இருதய அறுவை சிகிச்சை செய்ய முடியாது. மூன்று மாதம் கழித்து பின்னர் சிகிச்சை செய்யலாம். இதற்கான சிகிச்சை சென்னையில் உள்ள மருத்துவர்கள்தான் செய்ய முடியும் என்றும் கூறியுள்ளனர்.
இதையடுத்து, சென்னையிலிருக்கும் தனியார் மருத்துவமனையை அணுகியுள்ளனர். இருதய அறுவை சிகிச்சைக்கு ரூ.7 முதல் ரூ.9 லட்சம் வரை செலவாகும் என்று தனியார் மருத்துவர்கள் தெரிவித்தனர். தங்களிடம் இவ்வளவு பணம் இல்லை என்று மனவேதனையுடன் அந்தப் பெற்றோர் சொந்த ஊருக்குத் திரும்பினர்.
தங்களுடைய குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகமும், அரசும் உதவி செய்ய வேண்டும் எனக்கோரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வனிடம் மனு அளித்தனர். அதற்கு ஆட்சியர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு செல்லும்படியும், அதற்கு ஒரு கடிதமும் பெற்றோரிடம் கொடுத்து அனுப்பி நடவடிக்கையை எடுத்தார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்ற பெற்றோரிடம், பச்சிளம் குழந்தை என்பதால் தீவிர முயற்சி எடுத்து இருதய அறுவை சிகிச்சை செய்ய முடியாது. குழந்தை நலப்பிரிவு மருத்துவமனைக்கு செல்லும்படி என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மிகுந்த மனவேதனையுடன் பெற்றோர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.
இருதய பிரச்னையால் குழந்தை அவதி தற்போது அந்தக் குழந்தை ரத்த சுத்திகரிப்பு இல்லாமல் நாளுக்கு நாள் உடல் சோர்வு, சுவாசக்கோளாறு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல இன்னல்களை சந்தித்துவருகிறது. மருத்துவத் துறையில் பல சாதனைகள் படைத்துவரும் தமிழ்நாடு அரசு கோடியில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படும் இருதய பிரச்னைக்கு அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று குழந்தையின் பெற்றோர் கோரிக்கை-விடுத்துள்ளனர்.