கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு வருகை தந்தார். அங்கு வந்த அவருக்கு கடலூர் எஸ்.பி இராஜாராம் உள்ளிட்ட காவலர்கள் பலர் வரவேற்ப்பளித்தனர்.
தொடர்ந்து பல்வேறு குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்கள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 130 சவரன் தங்க நகை மற்றும் 25 செல்போன்கள் , வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. நிகழ்ச்சியை தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் தமிழக காவல்துறை குற்ற வழக்குகளை கையாளுவதிலும், குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்வதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என புகழாரம் சூட்டினார்.
மேலும், கடலூர் மாவட்டத்தை பொருத்தவரை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முத்தாண்டிக்குப்பத்தில் ஆதாய கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை மற்றும் அதே காவல் நிலையத்தில் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து 48 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது பாராட்டுக்குரியதாகும் என குறிப்பிட்டார். இதற்காக போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த அவர் சான்றிதழையும் வழங்கினார்.
தொடர்ந்து டிஜிபி சைலேந்திர பாபுவிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அதில் தீட்சிதர்கள் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் இருவிரல் பரிசோதனை நடைபெற்றதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இது குறித்து சுகாதாரத்துறை எந்த தகவலை முன்வைத்திருக்கிறதோ அதுவே சரி, எனக்கூறினார்.