தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை விவகாரம் - 10 தீட்சிதர்கள் மீது வழக்கு!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தின்போது கனகசபையில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தீட்சிதர்கள் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Chidambaram
சிதம்பரம்

By

Published : Jun 28, 2023, 1:54 PM IST

கடலூர்:கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலகப்புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் கனக சபை எனப்படும் சிற்றம்பல மேடையில் பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய அக்கோயிலின் தீட்சிதர்கள் அனுமதி மறுத்து வந்தனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு சிதம்பரம் நடராஜர் கோயில் கனக சபையில் பக்தர்கள் ஏறி வழிபட அனுமதி அளித்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டது. அதன் பிறகு, பக்தர்கள் கனக சபையில் ஏறி வழிபட்டு வந்தனர்.

இதனிடையே, ஆனி மாத திருமஞ்சன விழாவையொட்டி கடந்த 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில் நான்கு நாட்களுக்கு, பக்தர்கள் கனக சபையில் ஏறி வழிபட தடை விதித்து, தீட்சிதர்கள் சார்பில் அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது. இதற்கு பக்தர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 25ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்று, அங்கு கனகசபை தொடர்பாக தீட்சிதர்கள் வைத்திருந்த பதாகையை அகற்ற முயன்றனர். அப்போது, தீட்சிதர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அறநிலையத்துறையினர் மற்றும் தீட்சிதர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பதற்றத்தை தவிர்ப்பதற்காக அதிகாரிகள் பதாகையை அகற்றாமல் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 26ஆம் தேதி, போலீஸ் பாதுகாப்புடன் திடீரென கோயிலுக்கு சென்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அதிரடியாக பதாகையை அகற்றினர்.

ஆனால், அதன் பிறகும் தீட்சிதர்கள் பக்தர்களை கனக சபையில் ஏறி வழிபட அனுமதி மறுத்து வந்தனர். இதையடுத்து, நேற்று(ஜூன் 27) இந்து சமய அறநிலையத்துறையினர், காவல்துறையினருடன் சென்று கனகசபையில் ஏறி வழிபட முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய தீட்சிதர்கள் கீழே தள்ளிவிட்டனர். மேலும், கனகசபையை பூட்டிவிட்டு போலீசார் மற்றும் அறநிலையத்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இதனிடையே நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தீட்சிதர்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலை தங்களது சொந்த நிறுவனம் போல கருதுகிறார்கள் என்றும், வரவு செலவு கணக்குகள் குறித்த தகவலை தெரிவிக்கவும் மறுக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். ஆனி திருமஞ்சனத்தின்போது பக்தர்கள் கனகசபை மீது ஏறக் கூடாது என்ற சட்ட நடைமுறை இல்லை என்றும், அரசாணைப்படி எல்லா நாட்களிலும் பக்தர்கள் கனகசபையில் ஏறி தரிசனம் செய்யலாம் என்றும் தெரிவித்தார். பொதுமக்கள், பக்தர்களின் விருப்பப்படி சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுப்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் திரட்டி வருவதாகவும், சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள அனைத்து விதிமீறல்களையும் உடைத்தெறிந்து, இங்கு சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்பதை நிரூபிப்போம் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக சிதம்பரம் நடராஜர் கோயிலின் தீட்சிதர்கள் 10 பேர் மீது சிதம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: சிதம்பர சர்ச்சை - தீட்சிதர்கள் வைத்த பதாகை அகற்றம்

ABOUT THE AUTHOR

...view details