தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன உற்சவம் கொடியேற்றம் - வீதி உலா வைபவங்கள்

உலகப் பிரசித்திப்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

chidambaram nadarajar temple festival
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன உற்சவம் கொடியேற்றம்

By

Published : Dec 11, 2021, 10:29 AM IST

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனம் ஆகிய இரு திருவிழாக்கள் தொன்றுதொட்டு நடைபெற்றுவருகின்றன.

அதன்படி இந்த ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதியான இன்று சனிக்கிழமை மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் சார்பில் சக்கரவர்த்தி தீட்சிதர் தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றிவைத்தார்.

ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

பின்பு கொடிமரத்திற்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க மேளதாளத்துடன் பஞ்சமூர்த்தி பரிவாரங்களுடன் கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பின் கொடிமரத்திற்கு சக்கரவர்த்தி தீட்சிதர் தீபாராதனை கட்டி சிறப்புப் பூஜைகள் செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி நடராஜரை தரிசனம் செய்தனர். பஞ்சமூர்த்திகளுக்குத் தீபாராதனை காட்டப்பட்டது.

வீதி உலா வைபவங்கள்

இதனைத்தொடர்ந்து வருகிற டிசம்பர் 12ஆம் தேதி வெள்ளி சந்திர பிரபை வாகன வீதி உலா, டிசம்பர் 13ஆம் தேதி தங்க சூரிய பிரபை வாகன வீதி உலா, டிசம்பர் 14ஆம் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா, டிசம்பர் 15ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலா, டிசம்பர் 16ஆம் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலா, டிசம்பர் 17ஆம் தேதி தங்கக் கைலாச வாகன வீதி உலா நடைபெறவிருக்கிறது.

டிசம்பர் 18ஆம் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக் குதிரையில் வீதி உலா நடைபெறுகிறது. டிசம்பர் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.

டிசம்பர் 20ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலாவும் வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.

டிசம்பர் 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர். உற்சவ 10 நாள்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்சபை முன்பு மாணிக்கவாசகரை எழுந்தருளிச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறுகிறது.

இதையும் படிங்க:சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

ABOUT THE AUTHOR

...view details