சாமானியர்கள் விலையேற்றத்தைச் சமாளிக்க முடியாமல், வித்தியாசமான முறையில் சிக்கனத்தைக் கடைபிடித்துவருகின்றனர். குறிப்பாக, ஒவ்வொரு நாளும் பெட்ரோலுக்கென்று தனியாக பணம் ஒதுக்குவது, மக்களின் சேமிப்பை வெகுவாகப் பாதிக்கிறது. இதனை சரிசெய்ய, சிதம்பரத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன், சிக்கனங்களுடன் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் வகையில், தனது வாகனத்தை வடிவமைத்தார். அந்த வாகனத்தின் சிறப்பே, பெட்ரோலுக்கு பதிலாக பேட்டரியால் இயங்குவதுதான்.
இந்த வாகனத்தால், சுற்றுச்சூழல் மாசுபாடு கிடையாது, அதிக செலவுமில்லை. இது குறித்து சுப்பிரமணியன் கூறும்போது, “எனது இருசக்கர வாகனத்தில் 20 ஆயிரம் ரூபாய் செலவில், பேட்டரிகளை நானே பொருத்தினேன். 2 மணி நேரம் ரீசார்ஜ் செய்தால், 40 கிலோ மீட்டர் வரை இந்த வாகனத்தை இயக்கலாம். அரை யூனிட் மின்சாரம் மட்டுமே இதற்கு போதும். மணிக்கு அதிகபட்சமாக 25 கிலோ மீட்டர் முதல் 30 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கமுடியும். இனி பெட்ரோல் போட, தனியாக பணம் ஒதுக்கவேண்டாம் என்பது நிம்மதியளிக்கிறது” என்றார்.