தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒடிசா ரயில் விபத்து உலக அளவில் இந்தியாவுக்கு தலைக்குனிவு: திருமாவளவன் விமர்சனம்! - Chidambaram Mp thirumavalavan

தொழில்நுட்பம் வளர்ந்த காலத்திலும் ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து உலக அளவில் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது என்றும் பிரதமர் மோடி பொறுப்பேற்று வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து உலக அளவில் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது என விசிக தலைவர் பேட்டி
ஒடிசா ரயில் விபத்து உலக அளவில் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது என விசிக தலைவர் பேட்டி

By

Published : Jun 6, 2023, 11:35 AM IST

எம்.பி.திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பு

கடலூர்:விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று சிதம்பரம் சென்றிருந்தார். முன்னதாக சிதம்பரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "அண்மையில் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து, இந்திய தேசத்தை மட்டும் அல்ல உலகத்தையே உலுக்கி இருக்கிறது. இதுவரை 275 பேர் பலியாகி உள்ளனர். இந்த விபத்துக்கு ரயில்வே துறையின், மத்திய அரசின் அலட்சியமான போக்குதான் காரணம் என அந்த துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து கூறியிருக்கின்றனர். தென்கிழக்கு ரயில்வே மண்டல பொது மேலாளர் அங்கு உள்ள பிரச்சனைகள் குறித்து ஏற்கெனவே ரயில்வே அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியதாக சொல்கிறார். அகில இந்திய தணிக்கையாளர் அளித்த அறிக்கையில் நடவடிக்கை குறித்து குறிப்பிட்டிருக்கிறார்.

அது ஆட்சியாளர்களாலும், அமைச்சகத்தாலும் அலட்சியப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அமைச்சகம் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த ரயில் விபத்து நிகழ்ந்து இருக்காது. இதற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் ரயில்வே அமைச்சர் பதவி விலகி முழுமையான விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அதிநவீன தொழில்நுட்பம் வளர்ந்திருக்கின்ற இந்த காலக் கட்டத்தில், தற்போது ஏற்பட்டு உள்ள விபத்து உலக அரங்கில் நமக்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது.

மம்தா பானர்ஜி ரயில்வே துறை அமைச்சராக இருந்த காலத்தில் விபத்தை தவிர்க்க பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதுதான் இந்த ஆட்சி காலத்தில் கவாஜ் என்ற பெயரில் அழைக்கிறார்கள். ஆனால் அந்த திட்டத்தை கூட இவர்கள் நடைமுறைப்படுத்தவில்லை. ரயில்வே பாதுகாப்புக்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்பது தெரிகிறது.

இந்து ராஷ்டிரம் அமைப்போம் என்பவர்களுக்கும், இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் வெளிப்படையாக அச்சுறுத்துபவர்களுக்கும் அமைச்சர் பதவி தருகிறார் மோடி. மத வெறியர்களுக்கும், சாதி வெறியர்களுக்கும் அளிக்கின்ற முக்கியத்துவம். வெறுப்பு அரசியலுக்கு தருகின்ற முக்கியத்துவம் நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு அளிப்பதில்லை என்பது இது போன்ற சம்பவங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த விபத்து குறித்து முழுமையான வெள்ளை அறிக்கையை பிரதமர் வெளியிட வேண்டும். சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து தண்டிப்பதற்காக சிறப்பு புலனாய்வு விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் ஏப்ரல் 8 ஆம் தேதி கல்லூரி மாணவன் ஒருவன் உள்ளூரில் உள்ள கோயிலில் நுழைய முயற்சித்ததாக கடுமையாக தாக்கி உள்ளனர்.

அது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இதுவரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அந்தக் கோயிலை தனியார் கோயிலை போன்ற தோற்றத்தை மாற்ற சிலர் முயற்சிக்கிறார்கள். கோயிலுக்குள் யாரையும் நுழைய விட மாட்டோம் என்கின்றனர். இன்னும் அவர்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. =

மேல்பாதி மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் இந்து அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட கோயில்களில் பெரும்பாலானவற்றில் ஆதிதிராவிட பொதுமக்கள் வழிபாடு செய்ய முடியாத நிலை உள்ளது. கோயில் நுழைவு உரிமை தொடர்பான சட்டம் இயற்றப்பட்டது. அதில் தனிநபர் செலவு செய்து கோயிலை கட்டினாலும் அது பொதுவான வழிபாட்டு உரிமை பல ஆயிரக்கணக்கான கோயில்களில் தலைப்புகள் பழங்குடியினர் உள்ளே நுழைய முடியவில்லை.

இந்த அவலம் இன்னும் தொடர்கிறது. இந்த உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தி வருகிற ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் எனது தலைமையில் அடையாள ஆர்ப்பாட்டம் நடைபெறும். மதுரையைச் சுற்றி உள்ள கிராமங்களில் சாதிய வன்முறை அதிகரித்து உள்ளது. மேலும், இரு சக்கர வாகனங்கள் கார்கள் தாக்கப்பட்டு உள்ளது. கொடிக்கம்பம் சாய்க்கப்பட்டு உள்ளது. சிலர் காயம் அடைந்திருக்கிறார்கள்.

அவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி ஜூன் 12 ஆம் தேதி மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமயில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மேகதாது அணைக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியது நம்முடைய கடமை. காவிரி மேலாண்மை வாரியத்தின் பார்வைக்கு வராமல் அங்கே ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்க முடியாது. அதனால் மேகதாது பிரச்சினை பற்றி கவலைப்பட தேவையில்லை.

குழந்தை திருமணம் என்பது சட்டத்திற்கு விரோதமானது. 18 வயது முடிந்தவர்கள் தான் திருமணம் செய்ய வேண்டும். அது சிதம்பரத்திற்கும் பொருந்தும். தமிழக ஆளுநரை குழந்தை திருமணம் குறித்து முன்னுக்கு பின் முரணாக பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். இது அதிர்ச்சி அளிக்கிறது. குழந்தைகளை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பது தவறு. அது சட்டத்திற்கு எதிரானது. பெண் குழந்தைகளுக்கு எதிரானது.

இது குறித்து அந்த சமூகத்தைச் சேர்ந்த பெற்றோர் சிந்திக்க வேண்டும். புதிய நாடாளுமன்றம் என்பது அவர்களின் கனவு திட்டங்களில் ஒன்று. அவர்கள் விரும்புகின்ற இந்து ராஷ்டிரத்திற்கான அடையாளமாக புதிய நாடாளுமன்றத்தை கட்டி இருக்கிறார்கள். இதற்கு சான்றாக அவர்களின் கொள்கை ஆசானாக இருக்கின்ற சாவர்க்கரின் பிறந்தநாளில் அந்த கட்டிடத்தை திறந்து வைத்திருக்கிறார்கள்.

இது அவருக்கு சமர்ப்பணம் செய்ததாகவே பார்க்க முடிகிறது. சாவர்க்கர் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஏற்காதவர், ஜனநாயகத்தை அங்கீகரிக்காதவர். அவரது கனவை நினைவாக்க கூடிய பாஜக, சங்பரிவார் அமைப்புகள் அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டத்தை அலட்சியம் செய்வதில் குறியாக இருக்கிறார்கள். அதனுடைய அடையாளமாகதான் நாடாளுமன்ற கட்டிடத்தை எழுப்பி இருக்கிறார்கள்.

சாவர்க்கர் பிறந்தநாள் அன்று அதை திறந்து வைத்ததாலேயே அந்த நாளை நாங்கள் கருப்பு நாளாக கொள்கிறோம். நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்த இருக்கிறார்கள். மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நினைக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் அந்த எண்ணிக்கை உயர்வதற்கு வாய்ப்பு இல்லை. இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் அவர்கள் எதிர்பார்க்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு.

எதிர்காலத்தில் தென்னிந்திய ஆதரவு இல்லாவிட்டாலும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்கிற அடிப்படையில் தொகுதி வரையறை செய்ய இருக்கிறார்கள் என்றெல்லாம் அரசியல் வல்லுநர்கள் கருத்து கூறுகின்றனர். இதை ஜனநாயக சக்திகள் புரிந்து கொள்ள வேண்டும். சனாதன சக்திகளின் அரசியலை வீழ்த்த வேண்டும். அதற்காக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு மாநில வாரியாக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணை வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க:முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்த கோரிக்கை - நிர்வாக பொறியாளர், மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details