கடலூர்:உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலை தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வரும் நிலையில், அவர்களே கோயில் பூஜைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீட்சிதர்களின் குடும்பத்தில் ‘பால்ய விவாகம்’ எனப்படும் குழந்தைத் திருமணம் நடப்பதாக தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு புகார்கள் வந்து கொண்டிருந்துள்ளது.
எனவே, இந்த புகார் தொடர்பாக சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உரிய விசாரணை நடத்தி வழக்குகளைப் பதிவு செய்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக சிலர் கைதும் செய்யப்பட்டனர்.
இதனிடையே, குழந்தைத் திருமணம் நடைபெற்றதாக கூறப்படும் சிறுமிகளுக்கு இரு விரல் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவ்வாறு செய்தது தவறு எனவும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறி இருந்ததாக செய்தி வெளியானது.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து மருத்துவக் குழுவினர் ஏற்கனவே விசாரணை நடத்தினர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சிதம்பரத்தில் விசாரணை நடத்தியது. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நேற்றைய முன்தினம் (மே 25) வந்த ஆணையர் ஆர்.ஜி.ஆனந்த், இருவிரல் சோதனை நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை எனவும், அதேநேரம் பிறப்புறுப்பை தொட்டு விசாரணை நடத்தப்பட்டது உண்மை எனவும் தெரிவித்தார்.