தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடு குறித்து சிபிசிஐடி காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சந்தேகத்திற்கிடமாக சிலரைக் கைது செய்துள்ளனர். இந்நிலையில், குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் நான்கு பேரை காவலர்கள் கைது செய்தனர்.
இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத் தேர்வில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வில் கடலூர் அருகேயுள்ள கிழக்கு ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த, 12 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் இதுகுறித்து சிபிசிஐடி காவலர்கள் விசாரிக்க உத்தரவிடவேண்டும் எனவும் புகார் எழுந்தது.
இதனைத்தொடர்ந்து இந்த முறைகேடு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ராமாபுரத்தைச் சேர்ந்த 12 பேருக்கும் சிபிசிஐடி காவலர்கள் அழைப்பாணை அனுப்பியுள்ளனர். அழைப்பாணை அனுப்பப்பட்ட 12 பேரில், ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் வீதம் மூன்று குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் இருப்பதாகக் கூறப்படுகிறது.