கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நேற்று(ஜூன் 21) நடந்த யோகா தின நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அதன்பின்னர், வடலூரில் நடந்த வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
தொடர்ந்து மாலை, வள்ளலார் வாழ்ந்த இடமான மருதூருக்குச் சென்றார். அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி வேட்டி, சட்டை அணிந்து தனது மனைவி லெட்சுமியுடன் வந்தார். அங்கு பள்ளி மாணவிகள் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர். மேலும் அவர், அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்று தமிழில் கூறி வழிபட்டார்.
பின்னர் அங்கிருந்து, வள்ளலார் தண்ணீரால் விளக்கை எரிய வைத்த இடமான கருங்குழிக்கும், அவர் சித்தி பெற்ற இடமான மேட்டுக்குப்பத்துக்கும் சென்றார். மேட்டுக்குப்பத்தில் உள்ள திருவறையில் தரிசனம் மேற்கொண்ட அவர், சிறிது நேரம் அங்கு தியானம் செய்தார். பின்னர் வடலூரில் உள்ள சத்திய ஞானசபைக்குச் சென்று, அங்குள்ள அணையா அடுப்பை பார்வையிட்டார். மேலும் அதில் விறகு ஒன்றையும் எடுத்துப் போட்டார். அன்னதானக் கூடத்தை பார்வையிட்ட பிறகு தர்மசாலையில் தரிசனம் செய்தார்.
தொடர்ந்து வடலூரில் உள்ள திருமண மண்டபத்தில் வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழா நடைபெற்றது. இதற்கு பண்ருட்டி கே.என்.சி. மளிகை மோகனகிருஷ்ணன் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை வள்ளலார் மிஷன் சாது. ஜானகிராமன் வரவேற்றார். விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-
தர்மம் செய்ய வேண்டும்: சனாதன தர்மத்தின் மாணவன் நான். வள்ளலார் குறித்த புத்தகத்தை நான் படிக்க, படிக்க பிரம்மிப்பு அடைந்தேன். சனாதன தர்மத்தின் 10ஆயிரம் ஆண்டுகளில் பாரம்பரியத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளல் பெருமான் ஆவார். காழ்ப்புணர்ச்சி, அறியாமை போன்ற காரணத்தினால் சனாதனத்தைப் பற்றி சில மனிதர்கள் தவறான எண்ணத்தைக் கொண்டுள்ளனர். சனாதன தர்மத்தை ரிஷிகள், முனிவர்களின் தத்துவங்கள், உபதேசங்கள் மூலமாக அறிந்து கொள்ள முடியும். சனாதனத்தை ஒருவர் வெறுத்தாலும், அவர்களுக்குள்ளும் சனாதனம் இருக்கும் என்பதே சுருக்கமான உபதேசம் ஆகும்.
அனைத்து ஜீவராசிகளும் நோயற்று வாழ வேண்டும் என்பது தான் சனாதனம். அதனால் தான் வள்ளலார், வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறுகிறார். ஒரு பயிர் வாடிப்போனதை எண்ணி அவர் தவிக்கும் தவிப்பு தெரிகிறது. எப்போதெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ, அப்போதெல்லாம் இறைவன் அதற்கு தீர்வு காண்பான் என்று நம்பிக்கை உள்ளது.
அப்படி 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தமிழ்நாட்டில் காரிருளை நீக்கி ஜோதியாக வந்தவர் தான் வள்ளல் பெருமான். 200 ஆண்டுகளுக்கு முன்பு நாடு அடிமைப்பட்டுக் கிடந்தது. நாட்டை சுரண்டி விட்டனர். இந்த நாடு சுரண்டப்பட்டதால், பாரம்பரிய கல்வி, தொழில், விவசாயம், வலிமை என்று அனைத்தும் சீர்குலைந்து போய்விட்டது.
இதையும் படிங்க:ஆளுநரை தூக்கி எறியும் நாள் வெகு விரைவில் இல்லை - ஆ.ராசா ஆவேசம்