கடலூர்: கடலூர் - புதுச்சேரி எல்லை பகுதியில் தமிழகத்தில் அமைந்துள்ள குட்டியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளன. கடந்த 25ஆம் தேதி நள்ளிரவு இவர்கள் வீட்டின் முன்பக்கம் மெயின் கதவை அடைக்காமல் இரும்பு கதவை மட்டும் சாற்றிவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று வீட்டிற்கு வெளியே பயங்கர சத்தம் கேட்டது. இதனால் முருகானந்தம் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர். வெளியே உள்ள மின்விசிறி பழுதடைந்து இருக்கலாம் என சந்தேகத்துடன் பார்த்து கொண்டிருந்த போது மறுபடியும் ஒரு சத்தம். அப்போது வீடு சற்று அதிர்வு ஏற்பட்டதோடு புகை மண்டலமாக காட்சியளித்தது. வீட்டின் வாசலில் உடைந்த கண்ணாடி துண்டுகள் மற்றும் சிறிய ஆணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
மேலும் வீட்டு வாசலில் இருந்த ஸ்கிரீன் துணியும் கருகி இருந்தது. அப்போது தான் தெரிந்தது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகள் வீசி சென்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சிடைந்த முருகானந்தம் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் உடனடியாக தூக்கணாம்பாக்கம் போலீசாருக்கு தகவலை தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க:பிகார் நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு.. இரு கைதிகள் காயம்!
இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் 3 இளைஞர்களை போலீசார் பிடித்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதில் புதுவை மாநிலம் கரையாம்புதூர் பனையடிகுப்பம் சேர்ந்தவர் சுனில் (வயது 21). இவரது நண்பர்கள் சிங்கர்குடி புதுக்கடை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 22) மற்றும் 16 வயது சிறுவன் என தெரியவந்தது.
இதில் சுனில், முருகானந்தத்தின் 2-வது மகளை காதலிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக கூறப்படும் நிலையில், இது முருகானந்தத்திற்கு தெரியவந்து சுனிலை கடுமையாக எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சுனில் யூடியூப் பார்த்துக் எப்படி நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது என்பதனை கற்றுக் கொண்டு, பின்னர் சணல், உடைந்த கண்ணாடி துண்டுகள், சிறிய ஆணிகள் வெடி பொருட்கள் போன்றவற்றை வைத்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து உள்ளனர்.
பின்னர் சுனில் மற்றும் அவரது நன்பர் 2 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் நள்ளிரவில் முருகானந்தம் வீட்டிற்கு வந்து, இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை அடுத்தடுத்து வீசி விட்டு தப்பித்து சென்றதாக விசாரணையில் தெரியவந்தது. ஆனால் வெடிகுண்டுக்கு மேல் சுற்று சணலை இறுக்கமாக சுற்றாத காரணத்தினால் பெரிய அளவில் வெடி விபத்து நடைபெறாமல் சிறிய அளவில் மட்டுமே அது வெடித்து சிதறி உள்ளது.
இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுனில் (வயது 21), ராஜ்குமார் (வயது 22) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 3 பேரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் போலீசார் பிடிக்கச் சென்றபோது சுனில் ஓடிய போது கீழே விழுந்ததில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. கடலூர் அருகே காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில், யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:உபி.,யில் தொடரும் ஆணவக் கொலைகள்: மகளை கோடாரியால் அடித்துக் கொன்ற தந்தை!