தமிழ்நாடு முழுவதும் சுருக்கு வலை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஒரு சில மீனவ கிராமங்களில் இன்னமும் சுருக்குவலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடுக்கடலில் மீனவர்கள் சுருக்குவலை பயன்படுத்துவதால் சிறு மீன்கள்கூட மாட்டிக்கொள்வதால் மீன்களின் இனப்பெருக்கம் தடைபட்டுள்ளது எனவும், இதனால் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிப்புக்குள்ளாகிறது எனவும் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இந்த நிலையில், சுருக்குவலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பரங்கிப்பேட்டையில் இன்று காலையிலிருந்து 500க்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பரங்கிப்பேட்டை கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுருக்குவலை படகின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர்.