நடிகர் விஜய் - இயக்குநர் அட்லீ கூட்டணியில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான 'பிகில்' திரைப்படம் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து வரி ஏய்ப்பு புகார் காரணமாக 'பிகில்' படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம், திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியன், நடிகர் விஜய்யின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் வருமான வரித்துறையினரின் இந்த சோதனையின் காரணமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்துவரும் 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. முந்தைய நாள் இரவு 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் நெய்வேலிக்குச் சென்ற வருமான வரித்துறையினர், இரவு முழுவதும் விஜய்யிடம் விசாரணை நடத்தினர்.
வருமான வரித்துறையினரின் சோதனையில் ஃபைனான்சியர் அன்புச்செழியனுக்குச் சொந்தமான சென்னை, மதுரையில் உள்ள வீடுகளிலிருந்து இதுவரை ரூ. 77 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் விஜய் வீட்டிலிருந்து பணம் எதுவும் கைபற்றப்படவில்லை எனவும் கூறப்பட்டது.