தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 21, 2021, 5:20 PM IST

ETV Bharat / state

'சமூக நீதியை சிதைக்கும் பாஜக' - திருமாவளவன்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால், அது பாஜக ஆட்சியாகத்தான் இருந்திருக்கும் எனவும், சமூக நீதியை சிதைக்கும் கட்சி பாஜக என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைலர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

சமூக நீதியை சிதைக்கும் கட்சி பாஜக'
சமூக நீதியை சிதைக்கும் கட்சி பாஜக'

கடலூர்:விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான திருமாவளவன் பிறந்த நாள் விழா நேற்று (அக்.20) சிதம்பரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. சமூக நீதி சங்கங்களின் ஒற்றுமை என்ற பெயரில் இசை அரங்கம், வாழ்த்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு விகிக கடலூர் மாவட்ட செயலாளர் பால அறவாழி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளரும், காட்டுமன்னார்கோயில் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சிந்தனைச்செல்வன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் விசிக தவைவர் திருமாவளவன் பங்கேற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சிதலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திருமாவளவனை வாழ்த்தி பேசினர்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசுகையில், "பொதுக்கூட்டம், மாநாடு, இலக்கிய கூட்டம் போன்ற ஒவ்வொன்றிலும் எப்படி பேச வேண்டும் என்று தெளிவு பெற்ற பேராசிரியரின் பேச்சைப்போல திருமாவளவன் பேச்சு உள்ளது. அம்பேத்கருக்கு பிறகு இந்தியா முழுவதும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்காக போராடிக் கொண்டிருப்பவர் திருமாவளவன்.

அமைச்சர் பதவி தர பாஜக தயார்

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான இட ஒதுக்கீடு மறுக்கப்பட்ட போது அவர்களுக்காக நாடாளுமன்றத்தில் பேசினார். இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தபோது கட்சி தொண்டர்களுடன் போராட்டம் நடத்தினார். உலகின் அத்தனை பிரச்னைகளையும் விரல் நுனியில் வைத்துக் கொண்டு பேசக்கூடியவர்.

திருமாவளவன் பிறந்த நாள் விழா

நான் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெறுவதற்கு உதவியவர் திருமாவளவன். எனது வெற்றியை உறுதி செய்தது விசிக. திருமாவளவனுக்கு அமைச்சர் பதவி தருவதற்கு கூட பாஜக தயாராக இருக்கிறது. ஆனால் மதவாத அமைப்புகளிடம் திருமாவளவன் ஒருபோதும் அடி பணிய மாட்டார். திருமாவளவனோடு சரி சமமாக விவாதிக்கிற ஒருவர் கூட தமிழ்நாடு பாஜகவில் இல்லை" என்றார்.

சமூகநீதிக்கு எதிரான கட்சி பாஜக

பின்னர் பாராட்டுக்களை ஏற்றுக் கொண்டு திருமாவளவன் பேசியதாவது, " பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் சமூக நீதிக்கு எதிராக காய்களை நகர்த்தி வருகின்றன. வெளிப்படையாக பேசாமல் சமூகநீதியை அழிப்பதற்கான அனைத்தையும் செய்கின்றனர். மதவெறியை வளர்க்கிறார்கள். அதனால் சமூகநீதிக்கான சங்கங்களை நாம் ஒருங்கிணைக்க வேண்டிய தேவை இருக்கிறது.

எந்த சாதியாக இருந்தாலும் ஆகம விதிகளை கற்றுக்கொண்டால் கருவறைக்குள் நுழைய முடியும் என்கிற கோட்பாடுதான் சமூகநீதி. மண்டல் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்றபோது அதை எதிர்த்து வீதிக்கு வந்து போராடியது யார்? மருத்துவர் ராமதாஸை பார்த்து நான் கேட்கிறேன்.

மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து வன்முறையை நடத்தியது பாஜக. எந்த சமூகமும் படித்து, நல்ல வேலைக்கு வந்து விடக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தது. அத்வானி தலைமையில் அன்றைக்கு மிகப் பெரிய வன்முறை நடந்தது.

சமூகநீதிக்கு எதிரான கட்சி பாஜக. திமுக கூட்டணிக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளை சிதறடித்து அதன் மூலம் அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் அது அதிமுக ஆட்சியாக இருந்திருக்காது. பாஜக, ஆர்எஸ்எஸ் ஆட்சியாகத்தான் இருந்திருக்கும். அதன் மூலம் மிகப்பெரிய ஆபத்தை தமிழ்நாடு சந்தித்திருக்கும். அதிமுக பாஜகவாக மாறி இருக்கும்.

2024 நாடாளுமன்ற தேர்தல்

தலித், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட இயக்கங்கள் போன்ற இயக்கங்களாக உள்ள சமூக நீதி சங்கங்கள் இந்தியா முழுவதும் ஒன்றுபட வேண்டும். அப்போதுதான் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மோடியை வீழ்த்த முடியும். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர முடியாமல் தடுக்க முடியும். மதவெறி மற்றும் சனாதன சக்திகளின் கைப்பிடியில் இந்த நாடு சிக்கினால் அரசியலமைப்பு சட்டத்தை தூக்கி எறிந்து விட்டு, மனு தர்மத்தை சட்டமாக, ஆட்சி அதிகாரமாக கொண்டு வந்து விடுவார்கள். ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்ற நிலையைக் கொண்டு வருவார்கள். எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் தான் மோடி" என்று அவர் பேசினார்.

இதையும் படிங்க: 100 கோடி கரோனா தடுப்பூசி.. இந்தியா வரலாற்று சாதனை!!

ABOUT THE AUTHOR

...view details