கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருள்களை வாங்க வெளியே வரும் மக்களும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே ஊத்தாங்கால் கிராமத்தில் நேற்று இரவு ஒன்று திரண்ட இளைஞர்கள், பட்டாக்கத்தி மூலம் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். இந்த காணொலி சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேக் வெட்டி சிக்கலில் மாட்டிகொண்ட இளைஞர்கள் இதுகுறித்து விசாரணை நடத்திய ஓமங்கலம் காவல்துறையினர், கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற ஊத்தாங்கால் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவரின் பிறந்தநாளை முன்னிட்டு, அதே கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரன், அருண்ராஜ், வெற்றிவேல், பிரதாப் ஆகியோர் இணைந்து பிறந்தநாள் கேக்கை பட்டாக்கத்தி மூலம் தேவேந்திரனை வெட்ட வைத்துள்ளனர்.
தற்போது, கத்தி மூலம் கேக்வெட்டிய தேவேந்திரன், கத்தி கொடுத்த விக்னேஷ்வரன் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்ற மூன்று நபர்கள் உள்பட ஐவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க:ஊரடங்கில் மது விற்பனை... ஒரே நாளில் 99 நபர்கள் கைது!