கடலூர் மாவட்டம் சூரப்ப நாயக்கன் சாவடியில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் வாசுகி நேற்று (ஜூன்11) செய்தியாளர்களச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடையே பேசிய கே.பாலகிருஷ்ணன், "கோயில் தீட்சிதர்களின் நடவடிக்கை பெரும் பிரச்சினையாக மாறிவிட்டது.
கோயிலின் வரவு செலவு சம்பந்தமாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. தமிழ்நாடு அரசு ஆய்வு செய்ய குழு அமைத்து 4 முறைக்கும் மேல் நோட்டீஸ் அனுப்பியது. அதனைத் தொடர்ந்து அலுவலர்கள் ஆய்வுக்கு சென்றபோது, ஆவணங்களைக் காட்ட மறுத்ததுடன், தீட்சிதர்கள் கோயில் எங்களுக்கு சொந்தமானது என்று தெரிவித்துள்ளனர்.
இது உண்மைக்கு விரோதமானது. இந்த கோயில் பல்வேறு தீர்ப்புகளில் பொதுக்கோயிலாகவே கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு நிதானமாக இந்தப் பிரச்சனையை கையாளுகின்றது. இதனை சட்டத்துக்குட்பட்டு பராமரிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. வாரணாசியில் உ.பி மாநில அரசு தனிச் சட்டம் நிறைவேற்றி காசி விஸ்வநாதர் கோயிலை அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.
இதேபோல், ஹிமாச்சலப் பிரதேசத்தில் 12 கோயில்களுக்கு தனிச் சட்டம் இயற்றி அரசு கட்டுப்பாடுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழ்நாடு அரசும் தனிச் சட்டம் இயற்றி நடராஜர் கோயிலையும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். அப்போதுதான் வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்கள், சிற்பங்கள், பாதுகாக்கப்படும்.
பாஜகவின் வெறுப்பு அரசியல்:பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா பேசியது, உலக அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி அவர் பேசுவதற்கு பாஜகவும் அதன் துணை அமைப்புகளும் ருவாக்கிய வெறுப்பு அரசியல்தான் காரணம். மதவெறி அரசியலை தீவிரப்படுத்தியது மட்டும்தான் 8 ஆண்டுகளில் மோடி ஆட்சியின் சாதனை ஆகும்.
தமிழ்நாட்டில் அண்ணாமலை நினைத்ததை எல்லாம் பேசுவதோடு, மாநில அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார். டீசல் விலையை 16 முறை உயர்த்தும்போது, ஒரு முறைக்கூட எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யமால், முழு விலை உயர்வுக்கு காரணமாக இருந்துவிட்டு இன்று விலையை குறைக்கவில்லை என்று கூறுவது சரியல்ல.
நிலம் கையகம் நியாயமற்றது:என்எல்சியில் நிரந்தர தொழிலாளர்கள் எண்ணிகை குறைந்து வரும்நிலையில், தற்போது 3ஆவது சுரங்கம் அமைக்க 12,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 2 சுரங்கத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு எந்தவகையான இழப்பீடு வழங்காததால் 3ஆவது சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவது நியாயமற்றது.
விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்கிறார்கள். அந்த அளவிற்கு நிலக்கரி உள்ளது. கோரிக்கையை நிறைவேற்றி, நிரந்தர வேலை வழங்கி, மறுவாழ்வு, மறுகுடியமர்வு நிறைவேற்றிய பின்னர் நிலத்தை கையகப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
நிவாரணத்தை உயர்த்தி தருக:குச்சி பாளையத்தில் கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பெண்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார். இந்த இழப்பீடு போதுமானதாக இல்லை. நிவாரணத்தை உயர்த்தி வழங்குவதோடு அவர்களின் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கரோனா காலத்தில் 513 மாணவியருக்கு குழந்தை திருமணம் நடந்துள்ள அதிர்ச்சிகரமான விபரம் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனை அரசு அனுமதிக்கக்கூடாது. இதில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மாணவிகள் கல்வி தொடரவும் உரிய நடவடிக்கை தேவை" என்றார்.
இதையும் படிங்க: ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய கும்பலை 2 மணி நேரத்தில் பிடித்த காவல் ஆய்வாளர் - சிக்கியது எப்படி ?