தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. தொலைதூரப் படிப்புகளுக்கான விண்ணப்ப விற்பனை துவக்கம்! - Vice Chancellor Dr Rama Kathiresan

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையப் படிப்புகளுக்கான விண்ணப்ப விற்பனையைத் துணைவேந்தர் டாக்டர்.இராம.கதிரேசன் துவக்கி வைத்தார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்

By

Published : Aug 4, 2023, 7:13 PM IST

Updated : Aug 4, 2023, 8:12 PM IST

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மையம் உள்ளது. இந்தக் கல்வி மையத்தில் கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசின் யுஜிசி அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் பல்வேறு தீவிர முயற்சிகளுக்குப் பிறகு, தற்போது அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் பாடப்பிரிவுகளை நடத்துவதற்கு யுஜிசி அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து இன்று தொலைதூரக் கல்வி மையப் படிப்புகளுக்கான விண்ணப்ப விற்பனை அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தொலைதூரக் கல்வி மையத்தில் துவங்கியது. இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் இராம.கதிரேசன் பங்கேற்று, தொலைதூரக் கல்வி மையப் படிப்புகளுக்கான விண்ணப்ப விற்பனையைத் துவக்கி வைத்தார்.

இதையடுத்து துணைவேந்தர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககம் 2012ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவின் தொலைதூரக் கல்வி வழிபடுத்துக் குழுவின் மேற்பார்வையில் இயங்கி வந்து கொண்டிருந்தது.

2015ல் பல்கலைக்கழக மானியக் குழுவின் அதிகாரிகள் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி பாடத்திட்டங்கள் ஏற்புடையது அல்ல என அறிவிப்பு கொடுத்தார்கள். அதனால் 2015 முதல் தொலைதூரக் கல்வியில் தடை ஏற்பட்டுள்ளது.

இருந்தாலும் கூட, நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருந்தது. 2022ல் பல்கலைக்கழக மானியக் குழுவின் மிக உறுதியான ஒரு அறிக்கையில் படிப்புகள் தொடரக்கூடாது என அறிவுறுத்தியது. இதனால் 2022ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.

பின்னர் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி 2015 முதல் சேர்ந்துள்ள மாணவர்கள் நலன் பாதுகாக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டு 2023ஆம் ஆண்டு, மார்ச் மாதம் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகள் அனுமதி பெறுவதற்காகப் பல்கலைக்கழக மானியக் குழுவில் விண்ணப்பித்து இருந்தோம்.

அதன் அடிப்படையில் சென்ற மாதம் பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டு குழு ஒன்று இங்கு வந்து ஆய்வு செய்தது. அப்போது உள்கட்டமைப்பு, பணி சிறப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து இப்போது எங்களுக்கு 2023ஆம் கல்வி ஆண்டு முதல் 27 பட்ட மேற்படிப்பு பாடத்திட்டங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது.

பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்குப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒப்புதல் தேவை இல்லை என்ற வகையிலே இப்போது 97 சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. மொத்தம் 125 படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப விற்பனை துவங்கி உள்ளது. அடுத்த வாரம் முதல் இணையதளத்திலும் விண்ணப்பப் படிவங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழகம் முழுவதும் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளை அளித்து வருவோம். அடுத்த ஆண்டு ஒருங்கிணைந்த பாடப்பிரிவுகளையும் தொலைதூரக் கல்வி மையத்தில் நடத்த அனுமதி பெறப்படும். பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல் எப்படி இருக்கின்றதோ, தமிழக அரசின் வழிகாட்டுதல்கள் எப்படி இருக்கின்றதோ அதன்படி தொலைதூரக் கல்வி மையத்தில் பாடப்பிரிவுகள் நடத்தப்படும். பி.எட் படிப்புக்கும் அனுமதி பெற தொடர்ந்து முயன்று வருகிறோம்.

தொழிற்கல்வி பாடப்பிரிவுகளைத் தொலைதூரக் கல்வி வழியில் பயிற்றுவிக்கக் கூடாது என்பதற்காக அதற்கு அனுமதி வழங்கப்படாது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குத் தமிழகத்தில் 55 படிப்பு மையங்கள் உள்ளன. இந்தப் படிப்பு மையங்கள் அருகில் உள்ள கல்லூரிகளோடு இணைந்து செயல்படும். வெளி மாநிலங்களில் உள்ள படிப்பு மையங்கள் மூடப்பட வேண்டும் என்பது பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவாகும்.

தொலைதூரக் கல்வி மையத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு படித்து, அரியர் வைத்திருந்தவர்கள் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பை தொலைதூரக் கல்வி மையம் வழங்கி இருக்கிறது. இதுபோல் பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நேரடியாகப் படித்த மாணவர்களுக்கும் இதுபோன்ற ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது.

2021ஆம் ஆண்டில் 86 ஆயிரம் மாணவர்கள் தொலைதூரக் கல்வி மையத்தைச் சேர்ந்தார்கள். இந்த ஆண்டு குறைந்தபட்சம் 50 ஆயிரத்திலிருந்து 60 ஆயிரம் மாணவர்கள் வரை சேர்க்கை நடைபெறும்" என எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

இதையும் படிங்க:கிராண்ட் மாஸ்டர் குகேஷ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Last Updated : Aug 4, 2023, 8:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details