நெய்வேலியில் பாமகவினர் நடத்திய போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை காட்சி கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனம், நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று (ஜூலை 28) என்எல்சி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் பாமகவினர் மற்றும் நெய்வேலியைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.
என்எல்சி (NLC) நிறுவனத்தின் பிரதான நுழைவாயில் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். அன்புமணி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாமகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, காவல் துறை வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 8 போலீசார் காயமடைந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பயிர்களின் நடுவே NLC-யின் கால்வாய் வெட்டும் பணி; கண்ணீரில் விவசாயிகள் - கலெக்டரின் பதில் என்ன?
போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதோடு, தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டு போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். இந்த வன்முறையில் பாமகவினர் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, போலீசார் கைது செய்த பிறகு வேனில் இருந்தவாறு செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி, "நெய்வேலி என்.எல்.சி பிரச்சனை அனைவருக்குமான பிரச்சனை. மண்ணையும் மக்களையும் அழித்து மின்சாரம் எடுக்க வேண்டாம். தமிழகத்தின் உரிமை பிரச்சனை இது. என்.எல்.சி விவகாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தும். விளைநிலங்களை என்எல்சிக்காக கையகப்படுத்தக் கூடாது. தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது. இங்கு என்.எல்.சி தேவையேயில்லை. கடலூர் மாவட்டத்தை என்எல்சி நிர்வாகம் முற்றிலும் அழித்து விட்டது" என ஆவேசமாக கூறினார்.
என்.எல்.சி-க்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சிய நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததன் காரணமாக நெய்வேலி பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:திடீரென வீட்டில் பற்றி எரிந்த தீ; ஒன்று கூடி அணைத்த பொதுமக்கள்!