மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி டெல்லி எல்லையை முற்றுகையிட்டு இப்போராட்டத்தை விவசாயிகள் தொடங்கினர். இதற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர், தொழிற்சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு
போராட்டம் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளது. ஆனால் இன்னமும் அதற்கு முறையான நடவடிக்கை எடுக்காத பிரதமர் மோடி பதவியேற்று, நேற்றோடு (மே.26) ஏழு ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் இந்நாளை கறுப்பு தினமாக அனுசரித்து நாடு முழுவதும் எதிர்ப்பு கடைப்பிடிக்க 40 விவசாய சங்கங்கள் அடங்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்தது. இதற்கு காங்கிரஸ், திமுக, சிவசேனா, தேசிய மாநாட்டு கட்சி உள்பட 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், விவசாயிகள் கறுப்பு கொடி ஏந்தி தங்கள் போராட்டத்தை பதிவு செய்தனர்.