கடலூர் சில்வர் பீச்சில் துவங்கியது நெய்தல் கோடை விழா கடலூர்:கடலும் கடல் சார்ந்த இடமான கடலூர் மாவட்டத் தலைநகரில் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நெய்தல் கோடை விழா மற்றும் அரசு பல்துறை பணி விளக்க கண்காட்சி தொடக்க விழா நேற்று(ஜூன் 30) சில்வர் பீச்சில் தொடங்கியது. இதில் பொது மக்களைக் கவரும் விதமாக பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளின் நடனம், வில்லுப்பாட்டு, குழு நடனம், கிராமிய கலைநிகழ்ச்சி மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்டப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
மேலும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான மணல் சிற்பங்கள், கடல் ஊர் என்று ஊரைக் குறிக்கும் விதமான மணல் சிற்பம், வனவிலங்குகளின் பாதுகாப்பு குறித்த மணல் சிற்பங்கள் எனப் பல்வேறு மணல் சிற்பங்களும் அமைக்கப்பட்டு இருந்தது. விழாவை தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்து, மாணவ - மாணவிகளின் கலைநிகழ்ச்சியைப் பார்த்து ரசித்தனர்.
முன்னதாக அரசின் பல்துறை பணி விளக்க கண்காட்சியை அமைச்சர்கள் திறந்து வைத்து, துறை வாரியாக அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியைப் பார்வையிட்டனர். இதில் வேளாண்மைத் துறை மற்றும் காவல் துறை, தீயணைப்புத் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்டப் பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் பொதுமக்களைக் கவரும் விதமாக அமைக்கப்பட்டிருந்தன.
மேலும் வேளாண்துறை சார்பில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட படகில் பழங்களை ஏற்றிச் செல்லும் விதமாகவும், மலர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வண்ணத்துப்பூச்சியும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கோடை விழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு பல்சுவை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
செய்தியாளர்களைச் சந்தித்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், “தமிழக அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இது போன்ற கோடை விழா நடத்தப்படுகிறது. ஒவ்வொரு துறையிலும் என்னென்ன திட்டங்கள் இருக்கிறது என்பதைப் பற்றி இந்த விழாவின் மூலம் மக்கள் அறிந்து கொள்ள முடியும். சென்னைக்கு அடுத்தபடியாக மிக நீண்ட கடற்கரையை கொண்டது, கடலூர் சில்வர் பீச். இது இயற்கை அளித்த வரப்பிரசாதம், கடலூர் சில்வர் பீச்சை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம், “சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்னை குறித்து அரசு உரிய முடிவு எடுக்கும்.
கடலூர் சில்வர் பீச்சில் அடுத்த ஆண்டு நடக்கும் கோடை விழாவுக்குள் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும். தோட்டக்கலைத்துறை சார்பில் கடலூர் சில்வர் பீச்சில் நெய்தல் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது பற்றி மாவட்ட கலெக்டரிடம் திட்ட அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. சில்வர் பீச்சில் நடைபாதை அமைக்கவும் ஏற்பாடு செய்து வருகிறோம்” என்றார்.
இதையும் படிங்க: திமுகவினரால் ரயில் பாதையில் சிக்கிய பள்ளி வாகனம்: துரிதமாக செயல்பட்டு மீட்ட எஸ்.ஐ!