கடலூரில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கட்சி நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசைப் பொறுத்தவரை ஒரு தெளிவான நிலை அவர்களுக்கு கிடையாது. சீனாவில் தொற்று ஏற்பட்ட 15 நாள்களில் 10 ஆயிரம் படுக்கைகள் செய்து விட்டார்கள். நம்முடைய அரசாலும் ஏராளமான படுக்கைகளை செய்திருக்க முடியும். ஆனால் அரசாங்கம் அதற்கு போதிய கவனம் செலுத்தவில்லை.
கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் நடைபெற்ற மோதல் துரதிர்ஷ்டமானது. ஆனால் அதைவிட மோசமான விஷயம் பிரதமர் மோடி இதுவரைக்கும் அதுகுறித்து தெளிவான விளக்கம் தரவில்லை. ராணுவ வீரர்கள் எப்படி கொல்லப்பட்டனர் என்று விவரம் கேட்டால் தேசத்தின் மீது உங்களுக்கு பக்தி இல்லை என்று கூறுகிறார்கள்.